நெல்லை, ஆக.9: சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை சார்பில் மாணவர் மன்ற தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு தனியார் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தொழில் சேவைகள் மற்றும் திட்ட வழங்கல் மேலாளர் வினோத் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாணவி கேத்ரின் மேரி வரவேற்புரை வழங்கினார். மதிவாணன் துவக்க உரையாற்றி, மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் தங்களது திறன்களை மேம்படுத்தி, புதுமையான சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து கல்லூரி நிர்வாக அறங்காவலர் பேராசிரியர் அமுதவாணன் தலைமையுரை வழங்கி, கல்வியுடன் தொழில்நுட்ப அறிவு, ஆராய்ச்சி திறன் மற்றும் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்வதன் அவசியத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் வேலாயுதம் வாழ்த்துரை வழங்கினார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறைத்தலைவி அன்னம்மாள், மாணவர் சங்க அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜெயமேரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.





